திங்கள், 4 மே, 2009

அம்மையப்பர் !




ஓரறிவு உடைய புல் பூண்டு முதல் ஆறறிவு படைத்த மனிதன் ஈறாக உள்ள
எல்லா உயிரினங்களும் ஆணும் பெண்ணுமாய் இருந்து தத்தம் மரபை
பேணிவருவதைக் காண்கிறோம்.பண்டைத் தமிழர் நுண்னுணர்வு மிக்கவர்
ஆகையால் இவ்வுலக உண்மையைக் கூர்ந்து கவனித்து பருமையில் உள்ள
எதுவும் நுண்மையில் அடங்கி இருக்கும் எனும் உண்மையை உணர்ந்து
இவ்வுயிரனங் களுக்கெல்லாம் முதலாகிய இறைவனுடைய பண்பிலேயே
இந்த ஆண்மை பெண்மைக் கூறுகள் கலந்திருக்க வேண்டும் என்று ஊகித்தனர்.

அவர்கள் தீயில் இறைவனுடைய ஆற்றல் மிகுதியாக விளங்குதலை உணர்ந்து
எரி அமைத்து வழிபாடு செய்து வந்தபோது தீயிலும் இருவேறு பண்புகள்
நிலவுவதைக் கண்டு தம் ஊகத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். [ மின்சாரம்,
அணுவிலும் இருவேறு கூறுகளின் செயல் உள்ளது ]

நெருப்பை மேம்போக்காகப் பார்த்தால் அது செந்நிறமாகக் காணப்படுகிறது.
அதனை நன்கு கவனித்தால் அச்செந்நிறத்துள் அடங்கிய ஒருசிறு பகுதி நீலநிறமாக
விளங்குவதைக் காணலாம். காரணம் நெருப்பில் நீரும் கலந்திருப்பதே.
[ இன்றைய அறிவியல் இதை உறுதிப் படுத்துகிறது. ]

நீலநிறமும் குளிர்ச்சியும் நீரின் பண்புகள்.செந்நிறமும் சூடும் நெருப்பின் பண்புகள்.
நீரில்லாத உலக வாழ்க்கையோ நெருப்பில்லாத உலக வாழ்க்கையோ நம்மால்
எண்ணிப் பார்க்கமுடியாது. வன்மையும் சூடும் செம்மையுமுடைய நெருப்பு
ஆண் கூறாகவும் மென்மையும் குளிர்ச்சியும் நீலமும் உடைய நீர் தண்மைமிக்க
பெண் கூறாகவும் கருதப்படுகின்றன.
ஆகவே பண்டைய மக்கள் இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் அம்மையாகவும் அப்பனாகவும் அமைத்து வழிபட்டனர்.
அம்மை அப்பனை வணங்கலாம்! அகிலத்தைக் கட்டி ஆளலாம்! !

கருத்துகள் இல்லை: