திங்கள், 10 ஆகஸ்ட், 2009

விஞ்ஞானம் - மெஞ்ஞானம் !

மாறுவது விஞ்ஞானம், மாறாதது மெஞ்ஞானம்.விஞ்ஞானம் என்பது சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்
எனும் ஐம்புலன்களுக்குள் எட்டக்கூடிய விஷயங்களைப் பற்றியது.இந்தப் புலன்களுக்கு ஆதாரமான
ஐந்து பூதங்களாகிய மண்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவைகளில் அடங்கிக் கிடக்கும் சக்திகளைக்
கண்டறிந்து அவைகளை நம் சாமார்த்தியத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது.இதில் எவ்வளவு
வியக்கத்தகு கருவிகளைக் கண்டு பிடித்தாலும்,விஞ்ஞான வித்தைகளைச் செய்தாலும் அவை அனைத்தும்
பஞ்சபூத சக்திக்குள் அடங்கியதாகவே இருக்கும்.விஞ்ஞான சக்திகளின் வெளித்தோற்றம் சாசுவதமானதல்ல.
கண்டுபிடிப்பிற் கேற்ப மாறுதலடைவதே ஆகும்.

இந்த பஞ்சபூதங்களும்,சூரிய சந்திரன் களும் கூட ஒரு நாளில் அழியக்கூடியவையே. சூரியன் ஒளி
மங்கி வருகிறது,வெப்பம் குறைந்து வருகிறது என்று ஆராய்ந்து சொல்கின்றனர்.அப்படி இவையெல்லாம்
அழிந்தபின் என்ன இருக்கும்? என்ற கேள்விக்கு பதில் காண முயலுவதுதான் மெய்ஞான ஆராய்ச்சி.
இந்த மேலான அறிவை நாடுவதுதான் மெய்ஞானம்.அது உண்மையான அறிவு,உண்மையைப் பற்றிய
அறிவு.

காலங்களைக் கடந்து நிலையாக நிற்பது எது?அழிவில்லாதது,நிரந்தரமானது ,எல்லை இல்லாதது,
எவ்வடிவும் இல்லாதது,எந்த அளவைக்கும் அடங்காதது எது ?அதுதான் உண்மை,இயற்கை
இறைசக்தி என்பதாகும்.இதன் மூல விக்ரகம் மெய்ஞானம்.உற்சவ விக்ரகம் விஞ்ஞானமாகும்.
மூலம் ஒரே விதமாக இருக்கும். உற்சவ விக்ரகத்தின் அலங்காரம் அடிக்கடி மாறும்.இதுதான்
விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் உள்ள வேறுபாடு.

அறிவியலை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.உடலின் சுகபோகத்துக்கு அறிவியல் சக்தி அதிகம்
பயன்படுவதே காரணமாகும். விஞ்ஞான சக்தியினை வெவ்வேறு விதங்களில் அறிந்து வருகிறாம்.
புராணக் கதைகளில் இவை வரங்களால் கிடைத்த சக்தியென வர்ணிக்கப் படுகிறது.
அப்படிப் பட்ட விஞ்ஞான சக்திகளை அதிகம் அடைந்து,அவற்றை தீய வழியிலேயே பிரயோகம்
செய்தவர்கள்தான் அரக்கர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பிற்காலக் கதைகளில்
இவை இயற்கையின் தத்துவங்களாக விவாதிகப் பட்டுள்ளது.தற்காலத்தில் அது சயன்ஸ் என்ற
பெயரில் அது சாஸ்திரமாக விளங்குகிறது.

விஞ்ஞானத்தை அனுபவிப்போம் ! மெய்ஞானத்தை அறிய முயல்வோம். !

சனி, 1 ஆகஸ்ட், 2009

தூக்கம் பயிருக்குத் தண்ணீர்!


ஒருவருடைய சுகம், துக்கம், உடல் நலம், பலம், பலவீனம் எல்லாமே
தூக்கப் பழக்க வழக்கங்கள்தான் தீர்மானிக்கின்றன.
மனதுக்கும் உணர்வுகளுக்கும் தொடர்பு அறுந்து போகும்போது தான்
தூக்கம் வருகிறது.நாள் முழுதும் உழைத்து மூளை களைப்படையும்
போது நம் கண்கள் பார்ப்பது மனதில் பதிவதில்லை. நம் காதுகள்
கேட்பது மூளைக்குப் போவதில்லை.
நாள் முழுக்க தன் ஞாபக சக்தியில் சேகரித்த செய்திகளை செரிக்க
மூளைக்கு ஓய்வு தேவை.. தூங்கினால் மட்டுமே அது செரிமானமாகி
தேவையான இடங்களில் சேகரிக்கப்படும். இல்லாவிட்டால் மூளைக்கு
செரிமானக் கோளாறு வந்து அவதியாகிவிடும்.
நேரத்தில் தூங்கி நேரமே எழுதல் நல்லது. சாதாரணமாக எட்டு மணி நேரம்
தூக்கம் தேவை. இது வயதைப் பொறுத்தும் இருக்கிறது. குழந்தைகள் அதிகம்
தூங்குவதும் முதியோர்கள் குறைவாகத் தூங்குவதும் தவிர்க்க இயலாத
ஒன்றாகும். முதியோர் தூக்கம் உடல் நலத்தைப் பொறுத்தும் உள்ளது.
தூங்கி எழுந்தவுடன் எந்தக் கலக்கமும் இன்றி தெளிவாக வழக்கமான
பணிகள் செய்யமுடிந்தால் அந்த நேரமே கூட போதுமான தூக்கமாக இருக்கும்.
இது அவரவர் உடல் மனநிலை பொறுத்து அமைகிறது.
பூமியின் காந்த மண்டலம் உள்ள வடக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால்
உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் எரிச்சலும் குழப்பமும் மிஞ்சும் எனப்படுகிறது.
தற்போதைய வீடுகளின் அமைப்பில் திசைக்கு முக்கியத்துவம் தருவதில்
பிரச்சனைகள் வரலாம். தலையைக் கீழே வைத்தவுடன் எங்கு தூக்கம்
நன்றாக வருகிறதோ அதுவே சிறந்த இடம்.
தூங்கினால் குழப்பம் தீரும். தூங்குவதையே குழப்பமாக்க வேண்டாம்.